மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் திரிகோணம் பெறுகிறார். நல்ல சந்தர்ப்பங்கள் தேடிவரும். அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சரளமான பணப்புழக்கம் ஏற்படும். 10-க்குடைய சனியும், 9-க்குடைய குருவும் 9-ஆமிடத்தில் கூடியிருப்பது தர்மகர்மாதிபதி யோகம். தன்னிச்சையாக செயல்பட்டு காரியத்தை சாதிக்கலாம். வாழ்க்கைத்துணையின் வேலை சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் முன்னேற்றம், எதிர்பார்த்த பதவி உயர்வு என எல்லாம் நன்றாக அமையும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர- சகோதரிவகையில் சுபகாரியங்கள் நடக்கும். குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள் சுமுகமான தீர்வுக்கு வரும். பூர்வீக சொத்து சம்பந்தமான குழப்பங்கள் விலகும்; சாதகமான முடிவுகள் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் பாதிப்பில்லை. தொழில் சிறப்பாகும். செல்வவளம் பெருகும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 28-ஆம் தேதிவரை விரய ஸ்தானமான 12-ல் இருக்கிறார். அட்டமத்துச்சனி நடப்பதால் எந்தவிதக் காரியத்திலும் மந்தத்தன்மையும் அஜாக்கிரதையான நிலையும் காணப்படும். 2-க்குடைய புதன் 2-ஆம் தேதி வக்ரநிவர்த்தியாகிறார். எனவே தேவைகள் பூர்த்தியாகும். அரசாங்கவகையில் இருந்துவரும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 11-ஆம் தேதிமுதல் கும்பத்திற்கு புதன் மாறி சூரியனோடு இணைகிறார். தொழில்துறையில் நல்ல நிகழ்வுகள் ஏற்படும். உத்தியோகப் பிரச்சினைகள் விலகும். அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயமும் அமையும். 2-ல் ராகு. குடும்பத்தில் உள்ளவர்களிடையே அனுசரித்துச் சென்றால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும். தந்தைவழி சொத்துப் பிரிவினையில் தடைகள் அதிகமாகும். வாகனவகையில் விரயங்கள் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவதற்குண்டான முயற்சிகள் தள்ளிப்போகலாம். வேலையில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 2-ஆம் தேதி வக்ரநிவர்த்தியாகிறார்; 11-ஆம் தேதி முதல் 9-ஆமிடத்துக்கு மாறுகிறார். திரிகோணம் பெறுகிறார். அரசுவழி ஆதாயங் கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பொதுக் காரியத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். ஜென்மத்திலுள்ள ராகு சில நேரங்களில் செயல்பாட்டில் தாமதத்தன்மையைக் கொடுத்தாலும், குரு பார்வையினால் அவை மாறும். 7-ல் உள்ள செவ்வாய், சனி திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களுக்கு காதல் அல்லது கலப்புத் திருமணத்தை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தில் அவ்வப்போது தொல்லைகள் வந்துவிலகும். கணவன்- மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும் பிரிவினை நேராது. கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது அவசியம். 14-ஆம் தேதிமுதல் 3-க்குடைய சூரியன் 10-ஆமிடத்துக்கு மாறுகிறார். தொழில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய தொழில் தொடங்கும் திட்டமும் செயல்படுத்தலாம்.
கடகம்
கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் 13-ஆம் தேதிவரை 8-ல் மறைவாக இருக்கிறார். குடும்பச்சுமை அதிகரிக்கும். செலவுகள் கூடும். கடுமையாக முயன்றும் சில காரியங்கள் இழுபறி நிலையாகவே இருக்கும் என்றாலும், 2-ஆமிடத்தை குரு பார்ப்பதால், செலவு ஒருபுறம் இருந்தாலும் வரவுகளும் வந்துகொண்டிருக்கும். அதாவது வரவுக்கேற்ற செலவென்பதும் ஒரு பொருள். 14-ஆம் தேதிமுதல் சூரியன் 9-க்கு மாறி திரிகோணம் பெறுகிறார். தடைப்பட்ட- இழுபறியாக இருக்கும் காரியங்களுக்கான முயற்சிகள் மளமளவென்று செயல்பட்டுப் பூர்த்தியாகும். திட்டமிட்ட முயற்சிகள் வெற்றியாகும். திடீர் வெளியூர்ப் பயணங்களும் அலைச்சல்களும் நேரும். வேலை விஷயமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல முற்படுவோர் நல்ல முடிவுகள் காணலாம். 12-க்குடைய புதன் 8-க்கு வரும்போது விபரீத ராஜயோகம் உண்டாகும். திருப்பங்கள் நாடிவரும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 5-க்குடைய குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பது மேலும் பலம். குழப்பங்கள் விலகும். சிந்தனை, செயல்திறன், முயற்சி, கீர்த்தி எல்லாம் சிறப்பாக விளங்கும். 11-ஆம் தேதிமுதல் 2, 11-க்குடைய புதன் 7-க்கு மாறுகிறார். பொருளாதாரத் தடைகள் விலகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். நண்பர்களினால் சகாயம் உண்டாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றலாம். 5-ல் சனி, கேது, செவ்வாய் இருப்பதாலும், ராகு சம்பந்தம் பெறுதாலும் திட்டங்களில் சிலநேரம் மனக்குழப்பம் வரலாம். சிலநேரம் விரக்தியும் சந்தேகத்தன்மையும் ஏற்படலாம். குருவும் அங்கிருப்பதால் விரக்தி, சந்தேகத்திற்குத் தீர்வும், மனக்குழப்பத்திற்கு விடையும் காணலாம். பிள்ளைகள்வகையில் சில கவலைகள் தோன்றி மறையும். பணியிலிலிருக்கும் தொய்வுகள் மாறும். சுபகாரியச் செலவுகளும் நடந்தேறும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து உரிய பரிகாரத் தல யாத்திரை செல்லலாம்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 2-ஆம் தேதி வக்ரநிவர்த்தியாகிறார். 11-ஆம் தேதிமுதல் 6-ஆமிடத்துக்கு மாறி அங்கு சூரியனோடு இணைகி றார். எனவே விரயங்கள் அதிகரிக்கும். இடமாற்றம் அல்லது ஊர்மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனைகள் மேலோங்கும். கடுமையாக முயற்சி செய்தும் காரியங்கள் சரியாக நடைபெறவில்லையே என்ற கவலை உண்டாகும். உறவினர்கள் வகையில் பகை, மனவருத்தம் ஏற்படலாம். 12-க்குடைய சூரியன் 14-ஆம் தேதிமுதல் 7-க்கு மாறி ராசியைப் பார்க்கிறார். விரயங்கள் இருந்தாலும் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் திடீர் மாற்றங் கள் ஏற்படும். அது நல்ல மாற்றமாகவும் அமையும். 4-ல் செவ்வாய், சனி, கேது சேர்க்கை என்பதால் தேக சுகத்தில் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும். 23-ஆம் தேதி செவ்வாய் 6-க்கு மாறியபிறகு இம்மாதிரி தொல்லைகளிலிலிருந்து சற்று விடுபடலாம். 12-ஆமிடத்தைப் பார்க்கும் குரு, மங்களச் செலவுகளைத் தருவார்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது சிறப்பென்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். எனவே உங்களுடைய செயல்பாட்டில் குறைபாடுகள் நேராது. 11-க்குடைய சூரியன் 5-ல் நின்று 11-ஆமிடத்தைப் பார்ப்பதால், அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் யாவும் கைகூடும். உங்களது திட்டங்களும் நினைத்தபடியே நிறைவேறும். சிலர் தொழில் மாற்றம் செய்யலாம். சிலர் செய்துவரும் தொழிலிலேயே சில நல்ல மாற்றங்களை நிகழ்த்தலாம். சகோதர ஸ்தானத்தில் குருவுடன் செவ்வாய் இணைவதால், உடன்பிறந்தவகையில் சுபமங்களச் செலவுகள் ஏற்படும். சனியும் கேதுவும் அங்கிருப்பதால் அலைச்சலுடன் கூடிய ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். தாய்மாமன்வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு விலகி உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும். உத்தியோகத்துறையினர் பணி உயர்வு எதிர்பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடக்கிறது. 2-ல் குரு, சனி, கேது, செவ்வாய் சேர்க்கை. அவர்களுக்கு ராகு சம்பந்தம். எனவே, குடும்பத்தில் குழப்பங்கள் நிகழும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, சச்சரவு, வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். மனைவிக்கு தேகசுகக் குறைபாடு, மனநலம் பற்றிய பிரச்சினைகள், வைத்தியச்செலவு ஆகியவற்றை சந்திப்பதால் நிம்மதிக்குறைவு உண்டாகும். சிலருக்கு வேலையையும் சரிவர கவனிக்க முடியாமல், குடும்பத்தையும் கவனிக்க முடியாமல் அல்லல்பட நேரிடும். உடன்பிறப்புகள் வகையில் உறுதுணையும் ஆதரவும் கிட்டுவது மனதிற்கு சற்று ஆறுதலாக அமையும். உங்கள் தேகசுகம் தெளிவுபெறும். 7, 12-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவதும் மேற்கூறிய பலனுக்கு ஒரு காரணமாகும். 2-ல் உள்ள குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் கெடாது. கடன்சுமை இருக்கத்தான் செய்யும்.
தனுசு
தனுசு ராசியில் குரு, சனி, செவ்வாய், கேது ஆகிய நான்கு கிரகங்கள் சேர்க்கை. ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. எல்லாமிருந்தும் எதுவுமில்லாத நிலைபோல உணருதல், மனதில் குழப்பம் போன்றவற்றை சந்திக்க நேரலாம். என்றாலும் ராசிநாதன் குரு ஜென்மத்தில் ஆட்சியாக இருப்பதால் தெளிவும் பிறக்கும். தனியார்துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகக் காணப்படும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டாகும். காவல்துறையால் வந்த கலகங்கள் அகலும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் பற்றிய எதிர்கால சிந்தனைகள் முன்னேற்றம் தரும். அவர்களால் நன்மையும் பாராட்டும் ஏற்படும். வாகன வகையில் பழுது அல்லது பரிமாற்றத்தால் செலவுகள் வரும். சிலருக்கு சிறு விபத்துகளும் நேரலாம்; கவனம் தேவை. 5-ல் சுக்கிரன் இருக்கிறார். குரு அவரைப் பார்க்கிறார். பூர்வ புண்ணியவகையில் நற்பலன்கள் உண்டாகும். வெளிநாட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி 12-ல் இருக்கிறார். அவருடன் 11-க்குடைய செவ்வாய், கேது, குரு ஆகியோர் சேர்க்கை; ராகு சம்பந்தம். எவ்வளவு வருமானம் வந்தாலும் அதைவிட செலவுகள் கூடுதலாக அமையும். விரயங்கள் கட்டுக்குள் இல்லையே என்ற கவலையும் உண்டாகும். இனம்புரியாத குழப்பமும் நேரும். பயணங்களால் பிரச்சினைகள் தோன்றும். உத்தியோகரீதியாக கடல்தாண்டிச் செல்லும் முயற்சிகள் தாமதமாகலாம். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்கலாம். பழைய வாகனத்தைப் பழுது பார்க்கவும் செய்யலாம். 11-ஆம் தேதிமுதல் 9-க்குடைய புதன் 2-ல் சஞ்சாரம் செய்கிறார். மாதப் பிற்பகுதியில் செலவுகள் குறையும். வீண்விரயங்கள் கட்டுக்குள் அடங்கும். சிலருக்கு பணியிட மாற்றம் அல்லது வீடு மாற்றம் போன்றவை ஏற்படலாம். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்கள் செய்வீர்கள். நண்பர்களால் அதற்கு அனுகூலமும் ஆதரவும் கிட்டும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம் பெறுகிறார். அவருடன் 3, 10-க்குடைய செவ்வாயும் கேதுவும் சேர்க்கை; குரு ஆட்சி. எனவே, ராசிநாதன் ராசியைப் பார்ப்பது ஒரு பலம். தொழில் வளர்ச்சி, புதிய திட்டங்களை செயல்படுத்துதல், நண்பர்களின் ஒத்துழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம் போன்ற பலவகையான நல்லவை நடைபெறும். உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றிகிட்டும். உத்தியோக இடமாற்ற முயற்சிகளும் பலன்தரும். கணவன்- மனைவிவகையில் ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிகமாகும். கணவரால் மனைவிக்கு அனுகூலமும் நன்மையும் ஏற்படும். மனைவியின் முன்னேற்றத்திற்கு கணவரும் உற்றதுணையாக நின்று செயல்புரிவார். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற லாம். ஜனன ஜாதக தசாபுக்தியில் குடும்பத் தினரிடையே சமராகு தசை அல்லது புக்தி நடந்தால் அதற்குண்டான பரிகாரங்களை மேற்கொண்டு செயல்படவும். மனை சம்பந்தமான பிரச்சினைகள் அகலும்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி பெறுகிறார். அவருடன் செவ்வாய், சனி, கேது சேர்க்கை; ராகு சம்பந்தம். "10-ஆமிடத்து குரு பதி மாறும்' என்பது ஜோதிடப் பழமொழி. இருந்தாலும் குரு ஆட்சியென்பதால் ஓரளவு சமாளிக்கலாம். உத்தியோகம் மற்றும் தொழில் துறையில் உள்ளவர்களுக்கு காரணமே புரியாத குழப்பமும் கவலையும் மனதை வாட்டும். அர்த்தமற்ற சிந்தனைகளை மனதில் சுமப்பதை விட்டுவிட்டு நிதானத்துடன்- பொறுமை யுடன் செயல்பட்டால் குழப்பத்திற்குத் தீர்வுண்டாகும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களி டமே திரும்பிவரலாம். பண விஷயத்தில் எச்சரிக்கையாக செயல்படவேண்டும். கொடுக்கல்- வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உடன்பிறப்புகளால் சங்கடமும் சஞ்சலமும் உண்டாகும். 4-ல் ராகு- தாய்சுகம் அல்லது தன்சுகம் பாதிக்கப்படலாம். வைத்தியச் செலவுகளும் வந்துவிலகும். அரசு உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாகாமல் நிதானமாகச் செயல்படவேண்டும். சிலருக்கு உத்தியோக இடமாற்றம் ஏற்படலாம்.